இலங்கை அரசு கலைக்கப்படும் என வெளியான தகவல் -ராஜபக்சே மறுப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளியான தகவலுக்கு ராஜபக்சே திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமராக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா, நியமித்த பிறகு அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே ராஜபக்சே அரசுக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. தமிழர்களுக்கு எதிராக சிறிசேனா நடந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இதனிடையே ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ.கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனவை அவரது இல்லத்திலேயே சந்தித்து தங்கள் முடிவை கூறிவிட்டதாக அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தநிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. புதிய அரசுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் என்பதால் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை பிரதமர் ராஜபக்சே மறுத்துள்ளார். மேலும் இலங்கை அரசின் தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தியிலும் இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்ற தகவல் என கூறப்பட்டுள்ளது. நள்ளிரவில் அரசு கலைக்கப்படும் என வெளியான தகவல் வதந்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version