ரயில்வே துறையில், சுமார் 3 லட்சம் பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரயில்வே துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் மற்றும் 55 வயதைக் கடந்தவர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதனுடன் திறமையற்ற மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான பணியாளர்களுக்கும் விருப்ப ஓய்வு அளிக்கும் பொருட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் தயாரித்து அனுப்பும்படி மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளதாகவும், இதில் இடம் பெற்றுள்ள 3 லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டுக்குள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கையை 13 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.