பயண இலக்கியம் என்றொரு பிரிவு உருவாகக் காரணமாக அமைந்தவர்களில் முதன்மையானவர்கள் என்றால் ராகுல்ஜி என்ற ராகுல் சாங்கிருத்தியாயன் அதில் முக்கியமானவர். குறிப்பாக மானுடவியல் ஆய்வுகளில் ஆவண நூலாகப் போற்றப்படும் வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் பெரும் பயண ஆவணத்தின் படைப்பு கர்த்தா இவரே.
ஆன்மீகவாதியாக, புத்த மத துறவியாக, மானுடவியல் ஆய்வாளராக, மார்க்சியவாதியாக என பல பரிமாணங்களில் தன் பரிணம வளர்ச்சியைப் பதிவு செய்த ராகுல சாங்கிருத்தியாயனை வரலாறு தன் கணக்குப்புத்தக்கத்தில் வரவு வைத்துக் கொண்ட நாள் இன்று.
அது 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி. இன்றை உத்தரப்பிரதேச மாநிலத்தில், இருந்த பண்டகா என்னும் கிராமத்தில் பிறந்தார். எல்லா சிந்தனையாளர்களுக்குமான பொது விதிதான். இவருக்கும் பள்ளிப்படிப்பில் பெரும் நாட்டமெல்லாம் இல்லை. ஆனால், எந்த ஒன்றையும் தேடி அடைவது என்பதில் தீரா உறுதி கொண்டவராக இருந்தார்.
தன் 20ஆவது வயதில் எழுதத் தொடங்குகிறார். அவரது பிள்ளைப்பருவ காலத்தில் தேசத்தின் பெரும் பிரச்சினையாக இருந்த பஞ்சம் குறித்து எழுதியதுதான் அவரது முதல் எழுத்துப்படி. அதன்பின்னர் தன் வாழ்நாள் முழுக்க அலைந்து அலைந்து அனுபவங்களை ஆவணமாக்கிக்கொண்டே இருந்தார். இது, பயண இலக்கியத்தின் தந்தை என்ற பொருண்மைக்கு அவரைப் பொருத்தமாக்கியது.
எழுத்துலகின் அக்கினிப்பிரவேசம்: காகித வழிக் கலகக்காரன் ஜெயகாந்தன்
நதிக்கரைகளின் எல்லைகளில் தோன்றி துலங்கிய நாகரிகங்கள், புலம்பெயர்ந்த கதைக்கூடாக தாய்வழிச் சமூகம், நிலவுடைமைச் சமூக குறித்த புரிதல்களையும் ஏற்படுத்தும் மிகச்சிறந்த ஆவணமாக பார்க்கப்படுகிறது வால்காவிலிருந்து கங்கை வரை நூல்.
இயந்திரப் புரட்சி வந்ததற்குப் பிறகு உற்பத்தி எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஆனால், எல்லோருக்குமான வாங்கும் திறன் அதிகப்பட்டதாய் தெரியவில்லை என்கிற கவலையை முன்னிறுத்தி பொதுவுடமைதான் என்ன? என்ற கேள்விக்கு விடை சொல்லும் நூல் பொதுவுடமையின் அவசியம் மற்றும் தேவை குறித்த வலிமையான எளிய புரிதலை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இன்றும் விளங்குகிறது.
பயணங்களாலும், பகுத்தறியும் திறனாலும் தான் பெற்ற அனுபவங்களை எழுத்துத் தொகுப்பாக்கி எல்லோருக்கும் கொடுத்துச் சென்ற ராகுல்ஜிக்கு, மனித குலம் உலகம் உள்ளளவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.