ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதம்

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், மூத்த தலைவர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததுடன், இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத பரிதாப நிலையில் உள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த செயற்குழு உறுப்பினர்கள், ராகுல்காந்தியே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். அவரை சமாதானம் படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூத்த தலைவரான கெலாட்டை, காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்வதற்கு, சோனியா தரப்பில் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும், அதற்கு மூத்த தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைவராக பதவியேற்ற பிறகும் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியில் அசோக் கெலாட் தொடர்வார் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version