தெலுங்கானாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போது தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அடிலாபாத் அருகே உள்ள பைன்ஸா,மற்றும் காமாரெட்டி அருகே உள்ள சார்மினாரில் அவர் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் பாஜகவையும் சந்திர சேகரராவின் ராஸ்டிரிய சமீதி கட்சியையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.

மத்தியில் நடக்கும் பாஜக ஆட்சியால் எங்கு பார்த்தாலும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டினார். இன்று நாட்டில் உள்ள பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுவதாகவும் அவர் கூறினார்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தோல்வியை தழுவும் என்று கூறிய அவர், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கும் மக்களவைத் தேர்தலில் தோல்வி காத்திருப்பதாக தெரிவித்தார்.

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழங்குடிகள் நலச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.மேலும் விவசாயிகளின் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Exit mobile version