பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து அதிகார மோதல் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அண்மையில் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி, தர்ணா போராட்டம் நடத்தினார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 11 மணி கூடுகிறது. முதலமைச்சரும், நிதியமைச்சருமான நாராயணசாமி, 4 மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இன்றைய கூட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாவேதநாயகம் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படவுள்ளது. பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனதாக தெரிகிறது.