மூன்றாம் நபருக்காக பொது நல வழக்கு தொடரமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் நபருக்காக பொது நல வழக்கு தொடரமுடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப்பெற வேண்டுமென வெங்கடேசன் என்ற 90 வயது முதியவர் அரசுக்கு மனு அளித்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நல வழக்குகள் விளம்பர நோக்கத்துக்காகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ, அரசியல் நலன்களுக்காகவோ தாக்கல் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டினர்.

மூன்றாவது நபருக்காக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர் காந்திக்கு ரூ.5,000 அபராதம் விதித்த நீதிபதிகள், அந்த தொகையை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறார் நீதி நிதியத்திற்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.

 

Exit mobile version