சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் அன்பு சுவர் திட்டமானது, நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்ததன் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், முதலில் அன்பு சுவர் திட்டம் தொடங்கப்பட்டது தேனியில்தான்.
தேனி சமத்துவபுரத்தில் மனிதநேய காப்பகம் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லங்களையும் முதியோர் இல்லங்களையும் நடத்தி வருபவர் பால்பாண்டி. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மனிதநேய காப்பகங்களை நடத்திவரும் பால்பாண்டி, சுமார் 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை வைத்து பராமரித்து வருகிறார். 15க்கும் மேற்பட்ட முதியோர்களை வைத்து முதியோர் இல்லமும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு சம தர்மபுரத்தில் உள்ள மனிதநேய காப்பகத்தின் முன்பகுதியில் ஒரு ஓரத்தில் அன்புச்சுவர் என்ற அமைப்பை உருவாக்கினார். பொருள் இருப்பவர்கள் தாங்கள் உபயோகித்தது போக, மீதமுள்ள பொருட்களை வீணாக்காமல் இங்கு வைத்து விட்டால், அதனை தேவைப்படுவோர் வந்து எடுத்துச் செல்லும் வண்ணம் வடிவமைத்துள்ளார். பொதுமக்கள் பயனுறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அன்பு சுவருக்கு பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பை கொடுத்துவருகின்றனர்.
இவரது இந்த திட்டத்திற்கு இப்பகுதி பொதுமக்களும் பரவலாக ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.