திருவள்ளூர் மாவட்டத்தில் ஊழலை மறைக்க ஆவணங்களை தீவைத்து எரித்த ஊராட்சி மன்ற செயலாளரை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சி மன்ற செயலாளராக செந்தில்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியதில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்படுகிறது. புதிய ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்க உள்ள நிலையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை செந்தில்குமார் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் செந்தில்குமாரை சிறை பிடித்தனர். மேலும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமாரை அங்கிருந்து மீட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.