யூ ட்யூபர் மதனை பிடிக்க முடியாமல் திணறிவரும் தனிப்படை – மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

ஆன்லைன் விளையாட்டில் பெண்களை இழிவாக பேசி தலைமறைவாக உள்ள யூ ட்யூபர்  மதனை பிடிக்க முடியாமல் திணறிவரும் தனிப்படை, மதனின் மனைவி மற்றும் தந்தையை பிடித்து விசாரித்து வருகிறது.

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு போட்டியான PUBG கேமை விளையாடி யூடியூப்பில் நேரலை செய்வதை மதன் என்பவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்போது, பெண்களை இழிவாக பேசிய மதன் மீது, தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்தன. இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். மதனை பிடிப்பதற்காக சென்னை, சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்தனர். தாம் ஜெயிலுக்கு சென்று வந்தால், அதன்பிறகு தன்னுடைய ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும் என சவால் விட்ட மதனை பிடிக்க முடியாமல், மூன்று தனிப்படை காவல்துறையினரும் திணறி வருகின்றனர்.

 

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் உள்ள மதனின் தந்தை மாணிக்கம் மற்றும் சேலத்தில் உள்ள மதனின் மனைவி கிருத்திகா ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வரும் விசாரணையில், மதனின் இருப்பிடம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் முகாமிட்டுள்ள தனிப்படை காவல்துறையினர், மதனின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version