முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் விதிகளை மீறி சிலர் போலியான கணக்குகளை வைத்திருப்பது நாம் அறிந்ததே. ஆனால், நிஜத்தில் இல்லவேஇல்லாத நபர்களின் அடையாளங்களைக் கொண்டு கம்ப்யூட்டர் புரோகிராம்களால் இயக்கப்படும் போலிக் கணக்குகளை உங்களுக்குத் தெரியுமா? உளவு அமைப்புகளால் உருவாக்கப்படும் இந்தப் போலி மனிதர்கள் குறித்துப் பார்ப்போம் இந்தத் தொகுப்பில்…
பிரபலங்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் விவரங்கள் கொட்டிக் கிடக்கக் கூடிய சமூக வலைத் தளமாக லிங்க்டுஇன் உள்ளது. அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க, சிகப்பு நிற முடியுடன் கூடிய கேத்தி ஜோன்ஸ் என்ற பெண்ணின் பெயரில் ஒரு கணக்கு இயங்கி வந்தது. ரஷ்ய மற்றும் யுரேஷிய நாட்டினராகவும், மிச்சிகன் கல்லூரியில் படித்தவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர் வாஷிங்டன்னில் உள்ள அமெரிக்க அரசின் ஆலோசகர்களுடன் நட்பு வளர்க்க ஈடுபாடு காட்டினார். இதனால் அவரது அடையாளத்தை அமெரிக்க ஊடகமான அசோசியேட் பிரஸ் ஆய்வு செய்தபோது அந்தக் கணக்கு, அந்தப் பெயர், அதில் இருந்த புகைப்படம் – அனைத்தும் போலியானவை என்று தெரிய வந்தது.
அந்தக் கணக்கை இன்னும் அதிகமாக ஆராய்ந்த அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம், அந்தக் கணக்கில் உள்ள புகைப்படம் எந்த ஒரு உண்மையான நபரின் புகைப்படமும் அல்ல என்றும், அது கணினியின் சுயமாக இயங்கும் திறன் கொண்ட ஜி.ஏ.என். என்ற புரோகிராமினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றும், இந்தக் கணக்கு கூட அப்படிப்பட்ட ஒரு புரோகிராமால்தான் இயக்கப்படுவதாகவும் தனது ஆய்வில் கண்டறிந்து ஒரு கட்டுரை வெளியிட்டது. இந்தக் கட்டுரை இப்போது அமெரிக்க வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உளவு நிறுவனங்களின் புதிய ஆயுதமாகப் பார்க்கப்படும் இந்தப் போலி மனிதர்கள் சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இணைய அமைப்புகளில் ஊடுருவி உள்ளனர், அவர்களால் நாம் உளவுபார்க்கப்படுகிறோம் என்கிறது அசோசியேட்டட் பிரஸின் இந்தக் கட்டுரை!.
இப்போது அமெரிக்காவில் இது போன்ற போலி நபர்கள் பெரிய அளவில் அடையாளம் காணப்பட்டு களையெடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்க ஊடகங்களில் அவர்களின் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் போலி நபர்களின் உருவாக்கத்திற்கு சீனாவைக் காரணமாகக் கருதுகின்றது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை. அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி கெவின் மில்லோரி என்பவர் சீனாவுக்கு முக்கியத் தகவல்களைக் கொடுத்ததற்காக கடந்த மாதம்தான் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இவருக்கு சீனாவுடனான தொடர்பு லிங்க்டு இன் தளத்தின் மூலமாகத்தான் கிடைத்தது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குக் காரணம்!.
மனிதர்களின் தேவை, ரசனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, நமது கவனத்தையும் நம்பிக்கையையும் ஈர்க்கும் விதத்தில் உருவாக்கப்படும் இது போன்ற போலி மனிதர்களைக் கொண்டு உளவு தவிர வேறு பல அசம்பாவிதங்களையும் கூட நிகழ்த்த வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள். இதனால் உங்களோடு முன் அறிமுகம் இல்லாதவர்களோடு நட்பு வைக்க வேண்டாம் என்று லிங்க்டு இன் தளமும் வலியுறுத்தி உள்ளது.
கம்ப்யூட்டர்களில் வைரஸ்சின் வரவு போல, சமூக வலைத் தளங்களில் இந்தப் போலி மனிதர்கள் பார்க்கப்படுகிறார்கள். மக்கள் இன்னும் விழிப்புணர்வாக இருக்க வேண்டிய தேவையை உலகுக்குச் சொல்கிறாள் கேட்டி ஜோன்ஸ்.