டெல்லியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரிய வழக்கை வரும் புதன்கிழமை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில், பேசிய பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், சூழ்நிலையை முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் டெல்லி காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது. இதனை எதிர்த்து தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, வழக்கை வரும் புதன்கிழமை விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.