ஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒருவரின் ஆடை ரூ.2 கோடியே 86 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.
தற்போது 71 வயதைக் கடந்த ஒலியா நியூட்டன் ஜான், ஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரீஸ்’ என்ற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்றார்.
இசை மற்றும் காதலைக் கதைக்களமாக கொண்ட ‘கிரீஸ்’ திரைப்படத்துக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ஒலிவியா நியூட்டன் ஜான் கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிறச் சட்டையை அணிந்து நடித்திருப்பார். இந்த ஆடை மிகவும் பிரபலமானது.
இந்த நிலையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் ஒலிவியா நியூட்டன் ஜான், தன்னைப் போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் புற்றுநோய் சிகிச்சை மையத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்தப் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஒலிவியா நியூட்டன் ஜான், தான் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஏல நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விட்டார்.
அப்போது, ‘‘கிரீஸ்’’ திரைப்படத்துக்காகப் பயன்படுத்திய கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிறச் சட்டை ரூ.2 கோடியே 86 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தத் தொகை எதிர்பார்க்கப்பட்டதை விட 2 மடங்கு அதிகம் என ஏல நிறுவனம் கூறியது.
பிறருக்கு உதவும் நோக்கத்துடன் ஒலிவியா தனது ஆடைகளை ஏலம் விட்டு நிதி சேர்த்திருப்பது, ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.