திண்டிவனத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார். நகராட்சி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அமைச்சர் சிவி.சண்முகம் போலியோ மருத்துவ வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 476 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருத்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ஆயிரத்து 202 மையங்களும், நகர்ப்புறங்களில் 379 என மொத்தம் 1581 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
மதுரை மாநகர் பகுதியில் 462 முகாம்களில் 1860 ஊழியர்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் முழுவதும் 1705 முகாம்களில் 7412 ஊழியர்கள் மூலம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 460 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட உள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். இதையடுத்து ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்களிலும், திருச்சியிலிருந்து ரயில்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ இல்லாத மாநிலமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் துவக்க விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேருந்து, ரயில் நிலையங்களில் நாளையும் போலியோ சொட்டுமருந்து வசதி வழங்கப்படும் என்றார்.
கருர் மாவட்டத்தில், போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். போலியோ சொட்டு மருந்தை, குழந்தைகளுக்கு அவர் புகட்டினார். மாவட்டம் முழுவதும் 831 இடங்களில் சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள புதுப்பேட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய் சேய் நலப்பெட்டகத்தையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற போலியோ நோய் சொட்டு மருந்து முகாமை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். கோபிசெட்டிப்பாளையம் வட்டாரத்தில் மட்டும் 110 முகாம்கள் அமைக்கப்பட்டு 16 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.