இலங்கையில் இருந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால், தமிழக கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை, குருசடை தீவு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் மற்றும் அப்துல்கலாம் நினைவிடம் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயம் கடலோர பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோரப் பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்தால் மீனவர்கள் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் நேரில் பார்வையிட்டார்.