ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமான 255 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஹாங்காங்கில் மும்பை வைர வியாபாரியான, நிரவ் மோடிக்கு சொந்தமான நகைகளை, அமலாக்க துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 255 கோடி ரூபாயாகும்.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி,  நிரவ் மோடியும், இவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை ‘நோட்டீஸ்’ அனுப்பியும், ஆஜராகாத நிலையில், நிரவ் மோடியை கைது செய்ய, சர்வதேச போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமாக, வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை, அமலாக்க துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த வகையில் ஹாங்காங்கில்,நிரவ் மோடிக்கு சொந்தமான வைரங்கள், தங்க நகைகள் ஆகியவை, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை, 255 கோடி ரூபாய் மதிப்பு உடையவை என கூறப்படுகிறது.

இதுவரை நிரவ் மோடிக்கு சொந்தமான 4 ஆயிரத்து 744 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்க துறையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version