தமிழகத்தின் கதை சொல்லும் பாரம்பரியம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

வில்லுப்பாட்டின் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது என்று, மனதின் குரல் நிகழ்ச்சி உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 69வது முறையாக, குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது என்றும், வித்யா என்பவர் வில்லுப்பாட்டு மூலம் புராணங்களைக் கதைகளாக கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

பஞ்சத் தந்திரக் கதைகள் போன்றவை, இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், சுதந்திரப் போராட்டம் குறித்த விவரங்களை குழந்தைகளிடம் எடுத்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், கிராமப்புற இளைஞர்கள் விவசாய உற்பத்தியில் ஆர்வத்துடன் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகள் தற்சார்பு நிலையை எட்டியுள்ளதாக கூறிய பிரதமர், இதன் மூலம், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடியும் என்றும் உறுதி அளித்தார்.

வேளாண் சட்டத்தால் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Exit mobile version