காமிராக் கண்வழி காயங்களை கல்வெட்டாக்கிய கலைஞன் டேனிஷ் சித்திக்

இப்படி நடந்திருக்கக் கூடாது.
அடடே!இப்படி நடந்திருக்கிறதே!
இப்படியெல்லாமா நடக்கும்?

இந்த எல்லா இப்படிகளும் உங்களுக்கு எப்படித் தெரியவந்தது என்று கேள்வி கேட்டு பாருங்கள். பதில், செய்தியாளர்கள் என்ற ஒருபடியில் வந்து நிற்கும்.

ஒருபுறம் சமூகத்தில் உரிய மரியாதை கிடைக்காமை, மறுபுறம் பொருளாதார சிக்கல் இவற்றுக்கு இடையில் தான் இன்றைய தேதியில் ஒரு ஊடகன் உயிர் வாழ்கிறான். அந்த உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத பணிச்சூழல் தான் இன்றைய தேதியில் அவனுக்கு வாய்க்கப் பெற்றுள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலேயே கடந்த 1992 முதல் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 30.

இந்த எண்ணிக்கை சர்வதேச அளவில் ஆயிரத்தை தாண்டுகிறது. அதுவும் போர் நடைபெறும் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் செய்தி சேகரிக்கச் சென்று உயிர்நீத்த செய்தியாளர்கள் ஏராளம். பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி 1992-ஆம் ஆண்டு முதல் இவ்வாறாக கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 1395. இதில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் 30 பேர்.

அந்த வரிசையில் இன்றைய தினம் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர் இழந்துள்ளார் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான புலிட்சர் விருதை வென்ற சித்திக், அண்மையில் ஒரு கான்வாய் தாக்குதலில் இருந்து தப்பி, அந்த அனுபவத்தை செய்தியாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தலிபான் படைகளுக்கும் இடையிலான சண்டையில் பரிதாபகரமாக உயிரிழந்தார். 

களத்தையும் காயங்களையும் தன் காமிராக் கண்வழி கல்வெட்டாக்கிய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் இழப்புக்கு நியூஸ்ஜெ குழுமத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

Exit mobile version