முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கான நீர்வரத்து நொடிக்கு இரண்டாயிரத்து 93 கனஅடியாகக் குறைந்துள்ளது.
கேரள மாநிலத்திலும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு நொடிக்கு 15 ஆயிரம் கன அடி என்ற அளவுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த வாரத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை படிப்படியாகக் குறைந்தது. இதனால் நேற்று நொடிக்கு மூவாயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று காலை இரண்டாயிரத்து 93 கன அடியாக நீர்வரத்துக் குறைந்தது. அணையின் நீர்மட்டம் 131 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.