பல்லடத்தில் சாயப்பட்டறை கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைவதாக புகார்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாசு ஏற்படுத்தும் சாய மற்றும் பாய்லர் ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், சுற்று வட்டாரங்களில் 50-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டு, கிணறு மற்றும் ஓடைகளில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாய்லர் ஆலைகளில் இருந்து வெளியேறும் கருப்புநிற துகள்கள் சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக கரைப்புதூரில் பொதுமக்கள், சாய ஆலை நிர்வாகிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாய ஆலைகளின் கழிவுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Exit mobile version