மக்களைக் கவர்ந்துள்ள மதராசப்பட்டினம் உணவுத் திருவிழா

பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதராசபட்டினம் விருந்து என்ற தலைப்பில் சென்னையில் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளின் சுவைக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் உடலில் பல்வேறு வகையான நோய்கள் சிறுவயதிலேயே நம்மைத் தாக்குகின்றன. இந்த நிலையில் நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் மதராசப்பட்டினம் விருந்து என்ற தலைப்பில் சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த விழாவைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் அரங்கம், பாரம்பரிய உணவு தயாரிப்பவர்களின் அரங்கம் உட்பட 160 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கு அந்த உணவுகளின் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறப்படுகிறது.

பாரம்பரிய உணவுகளின் நன்மைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுத்திருவிழா சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கின்றனர்.

இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்றுள்ள கல்லூரி மாணவிகள் பொது மக்களுக்கு உணவு உட்கொள்ளும் முறை குறித்தும், நாளொன்றுக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உணவுகளை நாமும் உண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த மதராசப்பட்டினம் விருந்து விழா அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Exit mobile version