வாள் முனையை விட பேனா முனை பெரிது என்பர். அந்த பேனாவின் முனையாக செயல்படும் பேனா நிப் தயாரிப்பு தொழில் அடையாளத்தை இழந்து வருவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது பேனா நிப்பு தயாரிக்கும் தொழில். கடந்த 50 ஆண்டுகளில், பேனாவின் பயன்பாடு அனைத்து நிலைகளிலும் அதிகமாக காணப்பட்டது. பேனாவில் தேய்மானம் என்பது அதன் நிப் மட்டுமே. இதனால், பேனாவைவிட நிப்பின் தேவை அதிகமாக இருந்தது.
சாத்தூர் பகுதிகளில் 1960-களில், 150-க்கும் மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கின. 2 ஆயிரத்து 500 மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.1990களுக்கு பிறகு ‘பால்பாயிண்ட்’ பேனாக்கள் வருகையால், மை ஊற்றி பயன்படுத்தும் பேனாக்களின் பயன்பாடு வெகுவாக குறையத் தொடங்கியது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் அனைத்து தரப்பினரும் இதுபோன்ற பால்பாயிண்ட் பேனாக்களையே அதிகம் பயன்படுத்ததொடங்கினர்.இதன் விளைவாக நிப் தயாரிப்புத் தொழில் முடங்கியது. நிப்பு தயாரிக்கும் கூடங்கள் மாற்று தொழிலுக்கு மாறின. எஞ்சியிருந்த நிப் தொழிற்சாலைகளிலும் போதுமான அளவிற்கு கூலி வழக்கப்படுவதில்லை எனவும் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மை பேனா பயன்பட்டிற்கு பிறகு, அரசு மானியமும் நிறுத்தப்பட்டதால், தொழில் நடத்துவதே சிரமமாக உள்ளதாக நிப் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அறிவித்தால் மட்டுமே அழிந்து வரும் நிப் தயாரிப்பு தொழிலை மீட்டெடுக்க முடியும் என தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.