காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகள் மற்றும் டெல்லியின் வடக்கு பகுதிகளிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் விமானங்கள் பறக்க தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு அதிரடியாக நுழைந்து இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக லேம், ஸ்ரீநகர், பதான்கோட், அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதேபோல், டேராடூன், தர்மசாலா விமான நிலையங்களும் மூடப்பட்டன. காஷ்மீரில் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல், டெல்லியின் வடக்கு பகுதிகளிலும், பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் விமானங்களை இயக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.