மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்

நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவதால், எதிர் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடங்கி வருகிறது. மேகேதாட்டு அணை, ரஃபேல் ஒப்பந்த விவகாரம் ஆகியவற்றை எழுப்பி நான்காவது நாளான நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஐந்தாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடவுள்ளது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகேதாட்டு அணை விவகாரத்தில், இன்றும் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ரஃபேல் ஒப்பந்த விவகராம் குறித்தும் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதனால் இரு அவைகளிலும், இன்றும் கூச்சல் குழப்பம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version