தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டியர் கால, சிங்கமுக யாழி சிற்பம் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வறட்சியால் பாண்டியர் காலக் கட்டடங்கள், முதுமக்கள் தாழிகள், எலும்புத் துண்டுகள், கல்லாலான நங்கூரம் ஆகியவை ஏற்கெனவே கண்டறியப்பட்டன. இந்நிலையில், பாண்டியர் கால சிங்கமுக யாழி சிற்பம் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதற்காக மரப் பலகையைக் கொண்டு தற்காலிகப் பாலத்தை அப்பகுதி இளைஞர்கள் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புவி தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் பிரத்தியேக இயந்திரங்கள் கொண்டு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.