’மெல்லிசை’ என்று சொல்லும் போதே இவரது பெயர்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்த அளவுக்குத் தன் கானக் குரலால் மக்களை கவர்ந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். அவரின் பிறந்த தினம் இன்று, அவரை பற்றிய சில தகவல்களை அறியலாம்…
1930 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். இவரது அம்மாவுக்கு இசையில் மிகுந்த விருப்பம். அது அப்படியே மகனிடமும் தொற்றிக்கொண்டது. ஆனால், இவரின் தந்தையோ அரசாங்க அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தனது மகனை இசையின் பக்கம் தலைவைத்தும் படுக்கக்கூடாது என்று கட்டளையிட்டார்.
ஸ்ரீனிவாஸை பி.காம். படிக்க வைத்த அவரது தந்தை, பட்டப் படிப்பு முடிந்ததும் வழக்கறிஞராக்கிப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்தார். எனினும், இசையில் இருந்த ஈடுபாடு காரணமாக, பி.பி.ஸ்ரீனிவாஸால் சட்டப் படிப்பில் நாட்டம் கொள்ள இயலவில்லை.
ஏ.எம்.ராஜாவை அறிமுகப்படுத்திய ஜெமினி ஸ்டூடியோவின் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் தான், பி.பி.ஸ்ரீனிவாஸையும் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தினார். ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’ படத்தில்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனார். தெலுங்கு, கன்னடம், இந்தி என எட்டு மொழிகள் தெரிந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். எட்டு மொழிகள் தெரியும் என்றால், வெறுமே பேச, பாட மட்டுமல்ல; எட்டு மொழிகளிலும் கவிதை புனையத் தெரியும் அளவுக்கு வல்லமை பெற்றவர்.
உருக்கமான பாடல்களை இவர் பாடிக் கேட்கும்போது உண்டாகும் பரவசமே தனி! பேசும்போது கணீரென்று, கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது ஓர் ஆச்சரியம்! தமிழில் நடிகர் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜாவின் குரல்தான் பொருத்தமானது என்று பலரும் நினைத்திருந்த காலமும் இருந்தது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்கிற பாடலை முதன்முதலாக ஜெமினிகணேசனுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸைப் பின்னணி பாட வைத்தார் ஜி.ராமநாதன். அது அத்தனைக் கச்சிதமாக அமைந்துவிடவே, அது முதல் ஜெமினிகணேசனுக்கு அதிகம் பாடத் தொடங்கினார் பி.பி.எஸ்.
பி.பி.எஸ்ஸின் குரலில் ‘மயக்கமா, கலக்கமா?’ பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியுமா என்ன? ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை…’, என சோகத்தில் மூழ்குவதாகட்டும்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘தாமரைக் கன்னங்கள், தேன்மலர்க் கிண்ணங்கள்’ எனக் காதலில் களிப்பதாகட்டும் பி.பி.எஸ்ஸின் குரல் செய்யும் மாயாஜாலத்துக்கு நிகரில்லை.
பலமுத்தான பாடல்களால் நம்மை கட்டி போட்ட பி.பி.ஸ்ரீனிவாஸ் ஏப்ரல்14 2013-ல் நம்மை விட்டு பிரிந்தார். அவர் மறைந்தாலும், காலங்களில் வசந்தமாய் இன்றும் ஒளிக்கும் அவரது பாடல்கள்…