சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் – செல்வி தம்பதி. அவர்களுக்கு தேவேந்திரன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தேவேந்திரன் வேலை செய்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மியில் ஈடுபாடுகொண்ட தேவேந்திரன், கம்பெனி பணத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு மூன்று லட்ச ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது.
கம்பெனி பணம் கையாடல் செய்த விவகாரம் தெரியவந்ததை தொடர்ந்து தேவேந்திரனை வேலையில் இருந்து நீக்கிய நிர்வாகம், கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக, போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஒரு வாரத்தில் கம்பெனியில் பணத்தைக் கட்டுவதாக தேவேந்திரனும், அவரது பெற்றோரும் காவல்நிலையத்தில் உறுதி அளித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
மகனின் நடவடிக்கையால் தாயார் செல்வி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குறிப்பிட்ட கெடுவுக்குள் பணத்தை கட்ட முடியாததால் தேவேந்திரன் புதன்கிழமை காலை தலைமறைவாகியுள்ளார். இந்த அதிர்ச்சியும் செல்வியை சேர்ந்து தாக்க, வீட்டில் யாரும் இல்லாதபோது, செல்வி தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து செல்வியை காப்பாற்ற முயற்சி செய்தபோது, செல்வி உடல் முழுவதும்
கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வியாசர்பாடி
காவல் நிலையத்திற்கு இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலில், அங்கு வந்த போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கு முடிவு கட்டப்படாமல் இழுபறியாகி வரும் நிலையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மகனின் செயலால் தாயார் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இனியாவது திமுக அரசு ஆன்லைன் ரம்மிக்கு முடிவு கட்டுமா அல்லது பிணந்தின்னும் அரசாகவே செயல்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.