7ல் ஒரு இந்தியருக்கு மனநோய் பாதிப்பு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை, ஒரு ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் லான்செட் என்ற மருத்துவ இதழ், இந்தியாவில் மனநோய்கள் பாதிப்பு குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு முதல், கடந்த 2017ஆம் ஆண்டு வரையில், இந்தியாவில் மாநிலவாரியாக எடுக்கப்பட்ட ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில், கடந்த 1990ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2017ஆம் ஆண்டில், இந்தியாவில் மனநோய் பாதிப்புகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், 19 கோடியே 70 லட்சம் இந்தியர்கள் மனநோய் பாதிப்புள்ளவர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதன்படி, இந்திய மக்களில் 7 பேரில் ஒருவர் மனநோய் பாதிப்பு உள்ளானவராக உள்ளார். இதனால், இந்த ஆய்வு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியர்களிடம் காணப்படும் மனநோய் பாதிப்புகளாக, பதற்றம், மனக் கவலை, மனச் சிதைவு, மனநிலைப் பிறழ்ச்சி, அறிவு வளர்ச்சி நின்று போதல் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் மனக் கவலை மற்றும் பதற்றம் ஆகியவை இந்தியாவில் மிக அதிக அளவில் காணப்படும் மனநோய் பாதிப்புகளாக உள்ளன. இந்தியர்களில் 4 கோடியே 60 லட்சம் பேர், மனக் கவலையினாலும், 4 கோடியே 50 லட்சம் பேர் பதற்றத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனக் கவலை பொதுவாக வயதானவர்களிடமே அதிக அளவில் காணப்படுகின்றது, இதுவே தற்கொலை உள்ளிட்ட விரும்பத் தகாத செயல்களுக்கு காரணமாகவும் மாறுகிறது.
மற்றொரு பக்கம், இந்திய குழந்தைகளும், மன இறுக்கம், அறிவு வளர்ச்சி இல்லாமை, முறைகளை பின்பற்றாத நடத்தை ஆகிய பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்புகள், தென்னிந்தியாவை விடவும் வட இந்தியாவில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன.
இப்படியாக, அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் அடங்கிய இந்தக் கட்டுரையில் காணப்படும் ஒரே ஒரு நல்ல செய்தி, இந்தியாவில் மனநலப் பிரச்னைகள் கடந்த சில ஆண்டுகளாக குறையத் தொடங்கி உள்ளன என்பதுதான். அந்த நிலையே இனி எப்போதும் தொடர வேண்டும் என்பதுதான், இந்திய மக்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது.