17வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.
பாஜகவின் இளைஞரணி உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஓம் பிர்லா, பாஜக யுவமோர்சாவின் மாவட்ட தலைவர், ராஜஸ்தான் மாநில தலைவர், தேசிய துணை தலைவர் என்று வளர்ச்சியடைந்தார். தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் துணை தலைவராகவும் ஓம் பிர்லா இருந்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு ராஜஸ்தானின் கோட்டா சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட ஓம் பிர்லா, காங்கிரஸின் சாந்தி தரிவாலை 10 ஆயிரத்து 101 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதன் பின்னர் 2008 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் கோட்டா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றார்.
2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோட்டா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கோட்டா தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி.யாக பிர்லா தேர்வாகியுள்ளார். பாஜகவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்தவரான ஓம் பிர்லா, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். அதேவேளையில், காங்கிரஸ் உட்பட பிரதான எதிர்க்கட்சிகளும், ஓம் பிர்லா சபாநாயகராக ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.