ஜெயலலிதாவின் கருணையால் சிற்றுண்டி நடத்தி வரும் மூதாட்டி

அடித்தட்டு மக்களிடமும் அன்போடு பழகியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்பதற்கு சான்றாக அவரின் கருணையால் 30 ஆண்டுகளுக்கு மேலாக போயஸ் தோட்டத்தில் சிற்றுண்டி நடத்தி வருபவர் மூதாட்டி சரஸ்வதி. அவர் ஜெயலலிதாவின் அன்பு நிறைந்த உள்ளத்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்….

சென்னை போயஸ் தோட்டத்தில் 30 வருடங்களுக்கு மேலாக சாலையோரமாக சிற்றுண்டி நடத்தி வருபவர் சரஸ்வதி. கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் இவர். கணவனை இழந்து, தனது மூன்று பெண் குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருந்த இவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லம் முன்பாக சிற்றுண்டி நடத்தி வருகிறார்.

உயர் பாதுகாப்பு நிறைந்த இடம் போயஸ்கார்டன்… திடீரென ஒரு நாள் போலீசார் அவர் நடத்தி வந்த சிற்றுண்டியை அகற்றியுள்ளனர். இனி எப்படி வாழ்க்கை நடத்த போகிறோம் என சரஸ்வதி திகைத்து நின்றார். சிற்றுண்டி அகற்றப்பட்ட விசயம் எப்படியோ முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு செல்ல, தாயுள்ளம் கொண்ட ஜெயலலலிதா, உடனடியாக மீண்டும் அந்த இடத்தில் சிற்றுண்டி நடத்த உத்தரவிட்டார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்வில் ஒளியேற்றினார் என நன்றியுடன் பேசுகிறார் சரஸ்வதி. அன்று சிற்றுண்டி நடத்த மீண்டும் அனுமதி வழங்கியதை மூதாட்டி சரஸ்வதி இன்றும் நினைவு கூர்கிறார். சிற்றுண்டி கடை வருமானத்தில் தனது மூன்று பெண்களும் நல்ல நிலையில் உள்ளதாக நன்றி தெரிவிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு போயஸ் தோட்டம் களை இழந்து விட்டதாக கூறும் மூதாட்டி சரஸ்வதி, ஜெயலலிதா தனக்கு தாயாக பல உதவிகளை செய்துள்ளதாக கூறினார். ஜெயலலிதா இல்லாத குறையை தவிர, தனக்கு எந்த குறையும் இல்லை என்கிறார் கண்ணீர் மல்க …

Exit mobile version