கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்த வேளாண் தொழில்நுட்ப மேலாளரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம், ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் போலியான விவசாயிகளை சேர்த்து மோசடி நடந்தது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை களைய தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து, இதுவரை 13 கோடி ரூபாய் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வேளாண் அதிகாரிகள், வேளாண் ஒப்பந்த ஊழியர்கள், கணிணி உதவியாளர்கள் என இதுவரை 21 பேரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது ஒப்பந்த வேளாண் தொழில்நுட்ப மேலாளர் ராஜீவ்காந்தி என்பவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்டோரை போலியாக கிசான் திட்டத்தில் சேர்த்தது விசாரணையில் அம்பலமானது.
ராஜீவ்காந்தியை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையிலடைத்தனர்.