விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட படம் 'பேரன்பு’

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் பேரன்பு. படத்தின் பெயருக்கு நியாயம் செய்யும் வகையில் ஒவ்வொரு காட்சியிலுமே பேரன்பு நிறைந்திருக்கிறது. இது நல்ல படமா? நல்ல படம் இல்லையா? உலக சினிமாவா? இந்த படம் பிடிக்குமா? பிடிக்காதா? இப்படி எந்த கேள்விகளுக்கும் படம் பார்த்தவர்கள் பதில் சொல்லமுடியாத ஒரு படம் பேரன்பு. ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால் இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட படம்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு, இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, பிணைப்பு என்று இயற்கை ஒரு மனிதனின் வாழ்வில் என்னென்ன கதாபாத்திரங்களாக உருமாற்றம் பெருகிறது என்பதை, இயற்கை அழகானது, இயற்கை கொடூரமானது, இயற்கை விசித்திரமானது என 12 அத்தியாயங்களாகப் பிரித்து நம்மிடம் கதை சொல்கிறார் கதையின் நாயகனாக வாழும் அமுதவன் என்கிற மம்மூட்டி.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பதின் வயதுப் பாப்பாவாக தங்கமீன்கள் சாதனா. அந்த பெண்ணுக்கு தாயாக மாறி அனைத்தையும் செய்யும் தந்தை அமுதவனாக மம்மூட்டி.

எல்லோரையும் வெவ்வேறு விதமாக படைத்துவிட்டு, எல்லோரையும் சமமாக பாவிக்கும் இயற்கையின் முரண்களால் அமுதவனுக்கு நேரும் துயரங்களை நின்று நிதானமாக படம் பிடிக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா. பத்து வருடங்கள் மாற்றுத்திறனாளி மகளை கவனித்த பாப்பாவின் தாய், ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு வாழ்வைத் தேடி மகளைப் பிரிகிறார். அதன்பிறகு தந்தை, தாயாக மாறவேண்டிய சூழலில் அமுதவனாக வரும் மம்மூட்டி பாப்பாவின் தாயாக மாறுகிறார்.

மனிதர்கள் சூழ இருக்கும் இடத்தில் வாழும் வாழ்க்கை இயல்பானதாக இல்லாமல் போவதால், பாப்பாவின் நலனுக்காக மனிதர்கள் இல்லாத, பறவைகள் சாகாத ஓர் இடம்தேடிச் செல்கிறார் அமுதவன். கொடைக்கானலில் ஆள் அரவமற்ற ஒரு வீட்டில் வசிக்கத் துவங்குகின்றனர். அதுவரை அப்பாவைப் பிடிக்காத பாப்பாவிற்கு கொடைக்கானல் வீட்டுச் சூழல் தந்தைமீது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

நட்சத்திரங்களை எண்ண எத்தனிக்கும் பாப்பாவிற்கு மூன்றுக்குமேல் எண்ணத் தெரியவில்லை. மூன்றுக்குப் பிறகு நான்கு நான்கு என சொல்லிக்கொடுத்து தோற்றுப்போகும் மம்மூட்டி, நம் பாப்பாவிற்கு மூன்றுக்கு மேல் தெரிந்தால் மட்டும் நட்சத்திரங்களை எண்ணவா முடியும்? என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தன்னிலை உணர்கிறார். மகளின் ஆசைகளை நிறைவேற்ற ஒரு தந்தை அதிகபட்சம் என்ன செய்துவிடுவார் என்று நீங்கள் எப்படி யோசித்தாலும் உங்கள் எண்ண ஓட்டங்களில் பிடிபடாத பேரன்புகொண்ட அப்பாவாக இருக்கிறார் அமுதவன். ஒரு அப்பா இப்படியெல்லாம் செய்வாரா? என ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

ஒரு திரைப்படத்தின் ஒரு ஃப்ரேமை காட்டுங்கள். அந்த படம் எப்படிப்பட்டது என சொல்கிறேன் எனக்கூறிய ஜெர்மானிய இயக்குநர் ஃபெலினி இருந்திருந்தால் இயக்குநர் ராமை முத்தத்தால் குளிப்பாட்டியிருப்பார். எட்கர் திகாஸின் புகழ்பெற்ற ஓவியங்கள் போல கொடைக்காணல் காட்சிகளில் அவ்வளவு தெளிவு. தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் தவிர்க்க முடியாத பொக்கிஷம் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என்பதற்கு பேரன்பு தகுந்தச் சான்று. கொடைக்கானல் இருந்து நகர்ப் புறத்திற்கு திரும்பும்போது பரபரப்பு தொற்றிக்கொள்ளுமோ என எண்ணும் நம்மை, அமுதவனின் நிதானப் பார்வையோடு பயணித்து வியப்பூட்டுகிறார் தேனி ஈஸ்வர்.

அதேபோல், ராமின் உடன்பிறவா சகோதரனான யுவன் ஷங்கர் ராஜாவும் நிதானம், அமைதி, நிசப்தம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாகக் கையாண்டு படத்தின் மிகப்பெரிய தூணாக நின்றிருக்கிறார். எங்குமே அவசரம் காட்டாமல் நிதானித்து கத்தரித்த சூர்ய பிரதாபனும் பேரன்புக்குரியவரே. முகம் காட்டாத பாப்பாவின் அம்மா தன் தரப்பு நியாயத்தை சொல்வதுபோல இரண்டே காட்சிகளில் வரும் மனவளர்ச்சி குன்றிய இளைஞனின் அப்பாவும் நெஞ்சில் நிறைகிறார்.

நம்பிய பெண் ஏமாற்றிவிட்டு செல்லும்போதும், இவ்வளவு பிரச்சனைகளோடு இருக்கும் என்னை ஏமாற்றத் துனிந்த உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்திருக்கும் என எதார்த்தமாக கடந்துபோகும் காட்சி ஒன்றுபோதும் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற. இனிய வாழ்வுக்கான மனிதர்களின் நோக்கங்களை சிதைக்கும் கோபம், பொறாமை, பழிவாங்குதல், குரோதம், எரிச்சல் போன்ற குணங்கள் நீங்கி அன்பான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட முடியும் என்பதை பேரன்பு உணர்த்துகிறது.

மாற்றுத்திறனாளிகள் மீதிருக்கும் சமூகத்தின் பார்வை, மாற்றுத்திறனாளி குழந்தையின் ஒட்டுமொத்த பெற்றோர்களின் பிம்பமாக நிற்கிறார் மம்மூட்டி. எதிரிக்குக் கூட இப்படியொரு நிலை வரக்கூடாது என நாம் பிரார்த்திக்கும் காட்சிகளில் கூட, எல்லாம் பழகி மரத்துப்போன முகத்தோடு காட்சியளிக்கிறார். தன்னையும் மறந்து முகம் வெம்பி கண்ணீருக்கு வழிவிடும் காட்சிகள் இயற்கையின் பேராற்றலுக்கு முன்னாள் அற்ப மனிதன் என்ன செய்துவிட முடியும் என்ற கையறு நிலையை காண்பிக்கிறது.

பேபி சாதனாவாக தங்க மீன்களில் துள்ளிக்குதித்த சாதனா ஒரு வார்த்தைக் கூட பேசாமல் படம் முழுவதும் மூளை முடக்குவாத நோயாலியாகவே வாழ்ந்திருக்கிறார். மீரா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் வரும் அஞ்சலி அமீர், பேரன்பின் சாட்சியாக மாறுவதோடு படம் முடிகிறது. ஆனாலும், சாதனாவின் மிரட்சியான கண்களும், பருவ வயதில் தோன்றும் ஏக்கங்களும் நம்மை தூங்கவிடாமல் செய்கின்றன.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? கடவுள் என்னை ஏன் சோதிக்கிறார்? நான் என்ன பாவம் பண்ணேன் என தினம் தினம் அற்ப விஷங்களுக்காக புலம்பித் தீர்க்கும் நம் மனதுக்கு நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்வை வாழ்கிறோம் என்பதை உணரும் ஒரு வாய்ப்பை இப்படத்தின் மூலம் இயக்குநர் ராம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். ’பேரன்பு’ அன்பின் முதிர்ந்த வடிவம்.

 

Exit mobile version