சந்திரசேகரராவின் வலையில் யாரும் சிக்க மாட்டார்கள் – காங்கிரஸ்

பிரிவிணை அரசியல் மூலம் பா.ஜ.கவுக்கு சந்திரசேகரராவ் உதவுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களை தேசிய கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது. இருப்பினும் தெலங்கானா மற்றும் மிசோரமில் பிராந்திய கட்சிகள் ஆட்சியை பிடித்தன. தெலங்கானாவில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்த சந்திரசேகரராவ், தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதன் ஒருபகுதியாக மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் காங்கிரஸ், பிரிவினை அரசியல் மூலம் பா.ஜ.க-வுக்கு சந்திரசேகர் ராவ் உதவுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, எந்த கட்சி தலைவரும் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம் என்றும், அதேசமயம் சந்திரசேகரராவின் வலையில் யாரும் சிக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.

Exit mobile version