"ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்து நடித்தாலும் மக்களிடம் எடுபடாது"

அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று, செல்லுமிடமெல்லாம் ஸ்டாலின் பொய் சொல்லி வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்ராஜை ஆதரித்து, மயிலை மாங்கொல்லையில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரமாக சென்னை உள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார். இது அதிமுக அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த விருது என்று அவர் கூறினார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் முதலமைச்சர் சாடினார். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றிக்குப் பிறகு நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டார்.

தியாகராயநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, தியாகராய நகர் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், 5 வருடங்கள் மேயராக இருந்த ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என குற்றம்சாட்டினார். ஒரு கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தகுதியே ஸ்டாலினிடம் இல்லை எனவும் பகிரங்கமாக சாடினார்.

சென்னை அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். எம்எம்டிஏ காலனி பகுதியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர், பெண்கள் குறித்து இழிவாக பேசிய கட்சி நிர்வாகியை தட்டிக் கேட்க திராணி இல்லாத தலைவர் ஸ்டாலின் என விமர்சித்தார். திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது போல் ஸ்டாலின் கனவு வேண்டுமானால் காணலாம், நிஜத்தில் நடக்காது எனவும் விமர்சித்தார்.

Exit mobile version