தமிழகத்தில் முதல் முறையாக 9 வகையான செறிவூட்டப்பட்ட அரிசி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில், எம்ஜிஆர் சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் மாநாட்டில் பேசிய அமைச்சர் அன்பழகன், எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 51 லட்சத்து 96 ஆயிரம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
தருமபுரியில் அரசுப் பள்ளிகளில் ஆயிரத்து 350 தேசிய சிறார்கள் பள்ளிகள் உட்பட ஆயிரத்து 389 பள்ளிகளில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 654 மாணவர்களுக்கு 13 வகையான உணவு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நடப்பாண்டில் தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரி, தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள சத்துணவு மையங்களில் 9 வகையான செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.