இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மின்வெட்டுக் காரணமாக மீண்டும் ஆட்சியை இழக்கப்போகிறதா திமுக?

தமிழகத்தில் இரவு பகல் பாராமல் தொடரும் மின்வெட்டால் மக்கள் பரிதவிக்கும் நிலையில், மின்வெட்டு காரணமாகவே திமுக மீண்டும் ஆட்சியை இழக்கப் போவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

எங்க வீட்லயும் இல்ல, உங்க வீட்லயும் இல்ல, மேல் வீட்லயும் இல்ல, கீழ் வீட்லயும் இல்ல, கருணாநிதி ஆட்சியிலயும் இல்ல, இப்ப ஸ்டாலின் ஆட்சியிலயும் இல்ல… எங்கே தேடுவேன் கரண்ட எங்கே தேடுவேன்னு… என்று மின்சாரம் இல்லாத நிலையை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆமாம்.. எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், மின்வெட்டால், தமிழகம் வியர்த்து உருகி, இருட்டுல தள்ளப்படும் அவலம்தானே நிலவிக் கொண்டிருக்கிறது.

கொளுத்தும் வெயிலுக்கு மின்விசிறியை 12ல் வைத்தாலும் அனலாகவே கொதிக்குது… அப்படி இருக்கும்போது, மின்சாரம் இல்லை என்றால் என்னாகும்? பகலிலேயே இப்படி என்றால், இரவுகளின் கொடுமையை சொல்லி மாளாது. கைக்குழந்தை தொடங்கி தொடங்கி நோயாளிகள், முதியோர்கள் என மின்வெட்டு காரணமாக நொந்து போய் இருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்றைக்கு மின்சாரத்துக்காக கையேந்தும் மாநிலமாகும் நிலையைக் கொண்டுவந்ததுதான் திமுகவின் 2ஆண்டு சாதனை என்கிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.

தமிழகத்தில் கோடையில் மின்சாரத் தேவை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வது போல் தெரியவில்லை. ஒருபுறம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்றால், மற்றொரு புறம் பல மணி நேரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அரங்கேறி வருகிறது. தேவையுள்ள இடங்களில் மின்நிலையங்களை ஏற்படுத்தாததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் அணில்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அமைச்சரே கண்டுபிடித்து கூறிய நிலையில், தற்போது மின் உற்பத்தி நிலையங்களில் தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துள்ளதால் மின் உற்பத்தி பாதித்து மின் தடை ஏற்படுவதாகவும், தரமற்ற மின்மாற்றிகளால் மின்வெட்டு தொடர்வதாகவும் புதிய புகார்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இவை திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டவை என்பதால் அந்த டெண்டர்களிலும் ஊழல் நடந்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

அதே போன்று சென்னையில் 50ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட புதைவட மின் வயர்களில், மின்சார பயன்பட்டாலும், மின் அழுத்தத்தாலும் வெடித்தல் ஏற்பட்டு மின் தடை ஏற்படுவதாக சொல்லப்பட்டது. இதையடுத்து உயர்தர ஆர்ன்.என்.யூ.யூனிட் கேபிள்கள் மாற்றப்பட்டும் மின் தடை பிரச்சனை தொடர்வது, கேபிள்களின் தரத்தையும் ஆட்சியாளர்களின் தரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

ஆள் பற்றாக்குறை, அலட்சிய நிர்வாகம், லஞ்சத்தில் திளைக்கும் போக்கு என்று மின்வாரியத்தையும், துறை அமைச்சரையும் புகார்கள் சுற்றிச் சுழல்கின்றன.

கடந்த 2011 தேர்தலில் திமுக ஆட்சியை இழந்ததற்கு மின்வெட்டும் முக்கியக் காரணம் என்று அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். இப்போதும் அதே நிலை திரும்பியுள்ளது. தொடரும் மின்வெட்டால் மக்கள் அல்லல்படும் நிலையில், மீண்டும் திமுக ஆட்சியை இழக்கப் போவது திண்ணம் என்கிறார்கள் பொதுமக்கள்.

Exit mobile version