புதிய ரயில் பாதை – மத்திய பட்ஜெட்டில் ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு !

சென்னையை ஒட்டியுள்ள ஆவடி, ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடந்த 10 ஆண்டில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, அங்கு சாலை, குடிநீர் வசதிகள், ஏற்படுத்துவது மட்டுமின்றி போக்குவரத்து வசதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அப்பகுதிகளில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்திற்காக ஆவடி – ஸ்ரீ பெரும்புதூர் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என 2013ல் அறிவிப்பு வெளியானது. இந்த திட்டத்திற்கு 839 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அப்போது போதிய நிதி ஒதுக்கப்படாததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2022ல் அத்திட்டத்திற்கு இறுதி கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டு, திட்டத்திற்கு புத்துயிர் அளித்தது. இதனையடுத்து திட்டத்தை செயல்படுத்த சுமார் 839 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்டமாக 58 கோடி ரூபாய் நிதி, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரயில்வே பாதைக்கான சர்வே பணிகள் முடிந்தவுடன், நில எடுப்புக்கான பகுதிகள் கண்டறியப்பட்டு, நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version