தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கிறார். சட்டக் கல்வியை அனைத்து மாணவர்களும் பெற, இது போன்ற பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளில் தமிழக அரசு எடுத்து வருகின்றது.
உலகத் தரத்திலான கல்வியை தமிழக மாணவர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 4ல் ஒரு பங்கை கல்விக்கென ஒதுக்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. உயர்கல்வியில் இந்தியாவின் முதல்நிலை மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு என்றால் அதன் முக்கியக் காரணம் அதிமுக ஆட்சிதான்.
கடந்த 2011ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் 20 ஆயிரம் கோடியாக இருந்த கல்விக்கான நிதி ஒதுக்கீடு, நடப்பாண்டில் பள்ளிக் கல்விக்கு 33 ஆயிரம் கோடி, உயர்கல்விக்கு 4 ஆயிரம் கோடி என்று உயர்ந்து உள்ளது. இதன் மூலம் மறைந்த முதல்வரின் வழியில், அவரது எண்ணங்களை எள்ளளவும் பிறழாமல் நிறைவேற்றும் ஆட்சியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி செயல்படுவது மீண்டும் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
உயர் கல்வியில், சட்டக் கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை தமிழக அரசு அளித்து வருகின்றது. தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகமான டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில், ஆசியாவிலேயே மிகக்குறைந்த கட்டணத்தில் தரமான சட்டக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் கீழ் தற்போது 16 சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 14 சட்டக் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகள் ஆகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 7 சட்டக் கல்லூரிகளே இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பின்தங்கிய மாணவர்களும் சட்டக்கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2017ஆம் ஆண்டில் 3 புதிய சட்டக் கல்லூரிகளுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் உடனடியாக இயங்கத் தொடங்கின.
பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டில், சென்னையில் இருந்த சட்டக் கல்லூரியானது, இடப் பற்றாக்குறை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாக்கத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டம் திருவாலங்காட்டுக்கும் இடம் மாற்றப்பட்டு, இரண்டு கல்லூரிகளாக விரிவுபடுத்தப்பட்டது. நடப்பாண்டில், கடந்த ஜூலை 10ஆம் தேதி, சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் 3 சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். இந்த 3 கல்லூரிகளும் கடந்த ஆகஸ்டு மாதமே தொடங்கப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளில், 6 புதிய கல்லூரிகள், 2 விரிவாக்கக் கல்லூரிகள் ஆகியவை கட்டப்பட்டதால், தமிழக சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையும் போதுமானது அல்ல என்றே தமிழக அரசு கருதுகின்றது. தமிழகத்தில், மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி என்ற இலக்கை தமிழக அரசு நிர்ணயித்து உள்ளது. அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் சட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, எளிய மாணவர்களுக்கும் எட்டும் படிப்பாக சட்டப் படிப்பு மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் முதுகலை சட்டப்படிப்பில் பல புதிய பிரிவுகளைத் தொடங்கவும் தமிழக அரசு ஆர்வம்காட்டி வருகின்றது. தமிழகத்தின் விழுப்புரம் சட்டக்கல்லூரியில்தான், இந்தியாவிலேயே முதன்முறையாக சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற முதுகலை சட்டப்படிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் புதிய சட்டக் கல்லூரிகள் மூலம் தற்போது இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டம் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதிய நீதிமன்றங்களும், ஏற்கனவே உள்ள நீதிமன்றங்களுப் புதிய கட்டடங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.இதனால் ஏழை எளிய மக்கள் நீதிமன்றங்களை நாடும் போது, அவர்களுக்கான சட்ட உதவி விரைவாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.