பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் என நான்கு ஒன்றியங்களை கொண்டதாகும். இந்த நான்கு ஒன்றியங்களுக்கும் பெரம்பலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 477 படுக்கை வசதிகள் உள்ளன. இதன் மூலம் இங்குள்ள மக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று வருகின்றனர்.

இங்கு மகப்பேறுக்கு என தனியாக சீமாங் கட்டிடம் உருவாக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பான மருத்துவ வசதி அளிக்கப்படுகிறது. பல்வேறு வசதிகளை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை பெற்று இருந்தாலும் போதிய இடவசதி இல்லாமல் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதியது. இந்த சிரமத்தை போக்க அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 10 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக் கல்லூரிக்கு இணையான புதிய கட்டிடம் கட்ட அனுமதி அளித்தார். அதன்படி புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட பணிகள் முழுமை பெற்று பயன்பாட்டு வரும்போது மருத்துவ கல்லூரிக்கு இணையான வசதிகளை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை பெறும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டிடத்தில் அவசர விபத்து சிகிச்சை மையம், அதிநவீன வசதிகளுடன் இடம் பெறும் போது விபத்தில் காயம் அடைந்தவர்கள் உயரிய சிகிச்சை பெற திருச்சி செல்ல வேண்டியிருக்காது. இதனால் பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version