விதை நாயகனான நெல் ஜெயராமன் தமிழ் மருத்துவத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை தேடித்தேடி மீட்டு, நடைமுறைக்கு கொண்டு வந்தவர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் என்ற கிராமத்தில் பிறந்தவர் நெல் ஜெயராமன். நம்மாழ்வாரின் இயற்கை வேளாண்மை குறித்த சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். பாரம்பரிய நெல் ரகங்கள் சிலவற்றை ஜெயராமனிடம் கொடுத்து அவற்றை பெருக்குமாறு நம்மாழ்வார் கேட்டுக்கொண்டார். அதிலிருந்து பாரம்பரிய நெல் ரகங்களை தேடித்தேடி மீட்டெடுத்து விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தினார்.
இதற்காக 2006 ஆம் ஆண்டு ஆதிரங்கம் கிராமத்தில் நெல் திருவிழாவை நடத்தி இளைஞர்களிடமும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நெல் திருவிழா மூலம் காட்டுயானம், குழியடிச்சான், கறுப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட 169 நெல் ரகங்களை கிட்டத்தட்ட 7,000 விவசாயிகளிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
இதற்காக அவர் பணம் பெறுவது கிடையாது, ஒரு கிலோ பாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து, அடுத்த ஆண்டு 2 கிலோவாக பெற்று கொள்வார். இவ்வாறு அழிந்த, அழியும் நிலையில் இருந்த நெல் ரகங்களை மீட்டார். 2011 ஆம் ஆண்டு இயற்கை வேளாண்மைக்காக மாநில அரசின் விருதையும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டதற்காக 2015 ஆம் ஆண்டு மத்திய அரசின் சிருஷ்டி சம்மான் விருதையும் நெல் ஜெயராமன் பெற்றுள்ளார். அவரது மறைவு இயற்கை வேளாண் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.