பஞ்சாபில் 60 பேரை பலி கொண்ட ரயில் விபத்துக்கு மக்களின் அலட்சியமே காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் கடந்த மாதம் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு ராவண வதத்தை காண்பதற்காக உயரமாக இருந்த தண்டவாளத்தில் பொது மக்கள் பலர் நின்று வேடிக்கை பார்த்தனர். அவ்வழியாக சென்ற விரைவு ரயில் மக்கள் கூட்டத்தில் புகுந்ததால் 60 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் அனுமதியின்றி ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் குவிந்ததும், அவர்களது அலட்சியமுமே விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கு அனுமதிக்கப்பட்ட வேகம் 100 கிலோ மீட்டர் என்றும் விபத்தின் போது ரயில் 82 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.