நெல்லை அருகே, 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு, வரும் 13ம் தேதி சென்னை கொண்டு வரப்படுகிறது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னன் குலசேகரனால் கட்டப்பட்டது. 1982ம் ஆண்டு இந்த கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு நடராஜர் சிலை, பஞ்சலோக விக்கிரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிலையை மீட்கும் வகையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை இருப்பதை சிலைத் திருட்டு தடுப்பு காவல்துறையினர் அண்மையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து அருங்காட்சியத்தில் இருந்தது கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையானது டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சிலை வரும் 13ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.