கை, கால்களை இரும்பு சங்கிலியால் பூட்டிக் கொண்டு கடலில் நீந்திய கல்லூரி மாணவனின் சாதனையை அங்கீகரித்து, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன். தனியார் கல்லூரியில் பயின்று வரும் இவர், தனது கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் பூட்டிக் கொண்டு, கடந்த 2017 ம் ஆண்டு நாகூரிலிருந்து நாகை துறைமுகம் வரை நடுக்கடலில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சாதனை புரிந்தார். இதன் மூலம் 2013 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கோபால் கார்வியின் சாதனையை சபரிநாதன் முறியடித்தார்.
இந்த நிலையில், கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபரிநாதனின் இந்த சாதனையை அங்கீகரித்து, மார்ச்சிங் டூவெர்ட்ஸ் என்ற அமைப்பு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கியது. நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.