இங்கிலாந்து நாட்டில் திடீரென ஆரஞ்ச் நிறமாக மாறிய கடல் நீர்

உலக அளவில் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடு இங்கிலாந்து. அங்கு உள்ள பல அழகான கடற்கரை நகரங்களில் ஒன்றுதான் கார்ன்வால் நகரம். இந்த நகரத்தில் உள்ள பல கடற்கரை கிராமங்களில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கடந்த வாரம் கார்ன்வாலைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென தங்களை ஜெல்லி மீன்கள் கடிப்பதைப் போல உணர்ந்தார்கள். அவர்கள் உற்றுப் பார்த்தபோது நீல நிறக் கடல் ஆரஞ்சு நிறமாக மாறி இருந்தது. இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறியடித்தபடி வெளியே ஓடினர்.

இந்த ஆரஞ்ச் நீரில் குளித்த மக்கள் தங்களுக்கு நோய்கள் எதுவும் வந்திருக்குமோ? என்று மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் இந்த ஆரஞ்ச் நிற நீர் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடலில் உள்ள ஆல்காக்கள் என்னும் கடல் உயிரிகளில் ஒருவகை ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் என்றும், அவை கூட்டாக கடலின் மேல்பரப்புக்கு வரும் போது கடல் ஆரஞ்சுக் கடலாகத் தெரியும் என்றும், ஆல்காக்களை உண்ண மீன்களும் அப்போது கடலின் மேல் பரப்புக்கு வரும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அரசு தரப்பில் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version