தருமபுரி அருகே பழமையான கோயில் வளாகத்தில் ஐந்து ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்றிரவு மர்மநபர்கள் ஐந்து சிலைகளை வீசி சென்றதாக கூறப்படுகிறது. இரவுக்காவலராக பணியாற்றும் ரவிக்குமார் என்பவர் இன்று காலை கோயில் வளாகத்தில் சந்தேகமாக கிடந்த பையை கண்ட அவர், அதிலிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட ஐந்து உலோக சிலைகளும், மூன்று தங்கத்தாலி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, அதியமான் காவல் நிலையம் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், எதற்காக சிலைகளை இங்கு வீசி சென்றனர், திருடப்பட்ட சிலைகளா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள் சிலைகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.