சேலம் அருகே, அகல ரயில் பாதை தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட கொக்கிகளை, மர்ம நபர்கள் கழட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் சேலம் விருதாச்சலம் அகல ரயில் பாதை உள்ளது. இந்த ரயில் பாதையில், சுமார் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட கொக்கிகளை மர்ம நபர்கள் கழட்டி எடுத்துச் சென்றுவிட்டனர்.
கொக்கிகள் கழற்றப்பட்டு இருப்பதை பார்த்து பொதுமக்கள் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள், அவ்வழியாக சென்ற காரைக்கால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலையும், விருதாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் ரயிலையும் வேகத்தை கட்டுப்படுத்தி பாதையை கடக்க செய்தனர்.
பின்னர் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் புதிய கொக்கிகளை பொருத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து ரயில்வே காவல் உதவி ஆணையர் ரவீந்திரநாத் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.