திருப்பத்தூர் அருகே நடைபெற்ற அரசு விழாவில் அட்டவணை பிரிவைச் சேர்ந்த பெண் பேரூராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆலங்காயம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்ட நிலையில், அட்டவணைப்பிரிவைச் சேர்ந்த பெண் பேரூராட்சி தலைவர் தமிழரசி வெங்கடேசன், மேடைக்கு கீழே அமரவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், தாம் அட்டவணைப்பிரிவு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், துணைத்தலைவர் மட்டுமே அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டு மக்களுக்கான திட்டங்களை செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் வாக்களித்த மக்களுக்கு கடந்த ஆறு மாத காலமாக எந்தவித பணியும் செய்ய முடியவில்லை என தமிழரசி வெங்கடேசன் வேதனை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தலைமையின் கீழ் அரசு நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென ஸ்டாலின் அறிவித்தது வெறும் கண் துடைப்பா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.