மத்தியப் பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், வரும் 26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகியதால், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் கமல்நாத்துக்கு, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மத்திய பிரதேச சட்டப்பேரவை இன்று கூடியது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் முகக் கவசம் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். சட்டப்பேரவை கூடியதும், ஆளுநர் உரை நிகழ்த்தினார். சிறிதுநேரம் மட்டுமே உரை நிகழ்த்திய அவர், அரசியலமைப்பு சட்டத்தின் படி அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆளுநர் உரை முடிவடைந்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே, வரும் 26ம் தேதி வரை சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.