பிரபல கைபேசி நிறுவனமான ஆப்பிள், தனது உற்பத்தியை சீனாவில் இருந்து இடம் மாற்ற உள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் தற்போது உச்சத்தில் உள்ளது. இதனால் இருநாடுகளும், ஒன்றன் மீது ஒன்று இறக்குமதி வரிகளை வித்தித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில், மிகவும் மோசமடைந்துள்ள இந்தச் சூழல், வரும் ஆண்டுகளில் இன்னும் மோசமடையும் என்று அஞ்சப்படுவதால், சீனாவில் தங்கள் உற்பத்தியை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள் பலவும் வேறு நாடுகளில் இடம் பார்த்து வருகின்றன.
அமெரிக்காவின் பிரபல கைபேசி உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன்கள் மூலம் புகழ் பெற்ற ஆப்பிள் கைபேசி நிறுவனம், தற்போது தனது உற்பத்தியில் பெரும்பகுதிக்கு சீனாவில் உள்ள தனது தொழிற்சாலையை சார்ந்தே உள்ளது. இந்நிலையில், சாம்சங் கைபேசி நிறுவனம் தனது மொத்த உற்பத்தியில் பாதியை வியட்நாமில் மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு, ஆப்பிள் நிறுவனமும் இப்போது வியட்நாமுக்கு இடம்பெயர உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை வியட்நாம் அரசின் சட்டங்களும், வியட்நாம் மக்களின் தொழில் திறனும் அந்நிய முதலீட்டுக்குப் போதுமானதாக இல்லை. ஆனால் சமீப ஆண்டுகளில், அந்நிலை பெரிதும் மாறி உள்ளது. BPO துறையில், இந்தியாவின் வாய்ப்புகளை வியட்நாம் தட்டிப் பறித்தது அதற்கான ஓர் உதாரணம்.
வியட்நாமில் இதுவரை ஆப்பிள் நிறுவனம் நேரடியாகக் களம் இறங்காவிட்டாலும், ஆப்பிளின் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், வியட்நாமில் ஏற்கனவே வெற்றிகரமாக காலூன்றி, ஒரு ஆலையையும் நிறுவி உள்ளது. இதனால் ஆப்பிள் இடம்பெயர்வது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது.
சீனாவில் இருந்து நிறுவனங்கள் இடம்பெயர்வது அந்நாட்டின் வருவாயை பாதிக்கும் என்பதால், ஆசியாவில் சீனாவின் வல்லாதிக்கத்தை அது குறைக்கும். ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து கிளம்பத் தொடங்கினால், அதை பின்பற்றி இன்னும் பல நாடுகள் சீனாவில் இருந்து வெளியேறும். அவற்றில் சில, கட்டாயம் இந்தியாவிற்கு வரும். இதன் மூலம் இந்தியாவுக்கும் முதலீடுகள் பெருகும். இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள், சர்வதேச சந்தைகள் மட்டுமின்றி, இந்திய சந்தைகளிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.