கார்டூன் கதாபாத்திரத்தில் அதிக பேரை கவர்ந்த மிக்கி மவுசுக்கு இன்று 90-வது பிறந்த நாள்

உலகப் புகழ்பெற்ற மிக்கி மவுஸ் கார்டூன் கதாபாத்திரத்தின் 90-வது பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மிக்கி மவுஸின் கதையை கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு.

கார்டூன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ரசிப்பார்கள். அதிலும் மிக்கி மவுஸ் கார்டூனுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் அதிகம். குழந்தைகள் முதலில் வரைந்து பார்த்த உருவமாக பெரும்பாலும் மிக்கி மவுஸ் தான் இருக்கும் என்றும், இளமையாக இருக்கும் அந்த மிக்கி மவுஸ் இன்று 90-வது வயதை தொடுகிறது.

இந்த எலி கதாபாத்திரம் முதலில் முயலாக இருந்தது. யூனிவர்சல் பிக்சர்ஸ்க்காக வால்ட் டிஸ்னி, ‘அதிர்ஷ்ட முயல் ஆஸ்வால்ட்’ என்ற கதபாத்திரத்தை 1927-ல் உருவாக்கினார். இந்த கதாபாத்திரம் ஹிட்டடிக்கவே, இதற்கான காப்புரிமையை பெற்றுக்கொண்ட யுனிவர்சல் பிக்சர்ஸ் வால்ட் டிஸ்னிக்கு குறைவான ஊதியத்தை அளித்தது.

இதனால் யுனிவர்சல் பிக்சர்ஸில் இருந்து ஓவியர் அப் ஐவர்க்ஸ் உடன் வெளியேறிய டிஸ்னி, ஆஸ்வால்ட் முயல் போன்று ஒரு ஹிட்டடிக்கும் கார்ட்டூனை உருவாக்க இரவு பகலாக தலையை முட்டிக்கொண்டு யோசித்தனர்.

அப்போது ஓவியர் ஐவர்க்ஸ் மேஜைக்கு வந்து அடிக்கடி ஒரு எலி தொந்தரவு கொடுத்தது. அதனையே ஐடியாவாக்கி சிரித்த முகம், பெரிய மூக்கு, தொப்பி என்று அந்த எலியை மெருகேற்றினார். அதற்கு மார்டைமர் என்று தான் முதல் பெயர் சூட்டினார் டிஸ்னி. அந்த பெயரை அவரின் மனைவி விரும்பிவில்லை அதனை மாற்றச் சொன்னார். அதன்படி அந்த எலிக்கு மிக்கி என்று பெயர் வைக்கப்பட்டது.

1928-ம் ஆண்டு மே 28-ம் தேதியே மிக்கி மவுஸ் முதலில் உருவான நாள். ஆனால் பிளேன் கிரேஸி என்ற அந்த படம் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. அடுத்த வெளியான ‘தி கேலப்பிங் கெளச்சோவும்’ வெற்றி பெறவில்லை. சிறப்பு சப்தத்துடன் மூன்றாவதாக வெளியான ‘ஸ்டீம்போட் வில்லி’ படம் தான் மிக்கி மவுஸை உலக புகழ்பெற செய்தது.

அப்படம் வெளியான நவம்பர் 18-ம் தேதியை தான் மிக்கியின் பிறந்த நாளாக உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அதன்படி இன்று மிக்கியின் பிறந்த பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டிஸ்னி வேர்ல்டில் மிக்கியின் 90-வது பிறந்த நாளை 90 கார்டூன் கதபாத்திரங்கள் இணைந்து கொண்டாடியது பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது.

Exit mobile version